செந்தமிழ்சிற்பிகள்

மா.இராசமாணிக்கனார் (1907-1967)

மா.இராசமாணிக்கனார் (1907-1967)

அறிமுகம்

இராசமாணிக்கனார் 1907-ம் ஆண்டு மாணிக்கம்,தாயாரம்மாள் தம்பதியினருக்கு மகனாக ஆந்திர மாநிலம் கர்நூலில்  பிறந்தார். வட்டாட்சியராக அரசுப்பணியிலிருந்த  தந்தையின்  பணியிட மாறுதல்கள் காரணமாக இராசமாணிக்கனாரின் கல்வியும் பல ஊர்களில் வளர்ந்தது.  

தந்தையாரின் நண்பரான கே.திருவேங்கடம் என்பாரின் உதவியுடன் சென்னையில் தன் வாழ்வைத் தொடங்கி. தமிழின் முதன்மையான வரலாற்றெழுத்தாளர் மற்றும் ஆய்வாளராக  இடம் பிடித்தார் என்பது  கண்கூடு.

தமிழ்ப் பணி 

  • வண்ணாரப் பேட்டையிலுள்ள தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் 1928 - 1936 வரையில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இராசமாணிக்கனார் மாணவர்க்கான பாடநூல்களையும் துணைப்பாட நூல்களையும் எழுதினார்.
  • இவர் 1947 முதல் 1953 வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பணியினூடே  1951ல் ‘சைவ சமய வளர்ச்சி’ என்னும் நூல் வெளியிட்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார். 
  • 1953ல் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராகவும் தலைமை பேராசிரியராகவும் பொறுப்பேற்றார்.
  • 1959 முதல் 1967 வரை சென்னைப் பல்கலைக்கழக துணை தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பேற்றார். 

படைப்பு

  • 1930-ம் ஆண்டு ஹர்சவர்தனன், முடியுடைமூவேந்தர்கள், பொற்காலவாசகம், முசோலினி -ஆகிய நூல்களை எழுதினார்.
  • பல்லவர் வரலாறு , பல்லவப் பேரரசர், மொகஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்,தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்மொழி இலக்கிய வரலாறு, சோழர் வரலாறு, தமிழ் இனம், தமிழக ஆட்சி, தமிழ் அமுதம், இலக்கிய அமுதம், தமிழ்நாட்டு வடஎல்லை, தமிழகக் கலைகள், புதிய தமிழகம், சிலப்பதிகாரக் காட்சிகள், சேக்கிழார் ஆராய்ச்சி, சைவ சமயம், சைவ சமய வளர்ச்சி,பெரியபுராண ஆராய்ச்சி, நாற்பெரும் புலவர்கள் உள்ளிட்ட பல நூல்கள் எழுதியிருக்கிறார்.
  • தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டை ஆய்ந்து இவர் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ என்ற நூல் இவரது மறைவுக்குப் பின்னர் துணை வேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களால் 1970ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழி  வெளியிடப்பட்டது.
  • 1966-ல் மலேசியாவில் நடந்த முதலாம் உலகத்தமிழ் மாநாட்டில் இவரது  ஆய்வுக்கட்டுரையான ‘சங்க காலத் தமிழ்ச் சமுதாயம்’ அறிஞர்களால் ஏற்கப்பட்டது.
  • தமிழர் தம் பண்பாட்டைக் காக்கும் வகையில் தமிழர் திருமணம் நூலை எழுதினார்.

விருதுகள்/சிறப்புகள் 

  • தமிழக அரசு இவரது பணியை பாராட்டி 1966ல் மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு மா.இராசமாணிக்கனார் அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது . 
  • மா.இராசமாணிக்கனார் அவர்களின்  நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.
  • திருவாவடுதுறை ஆதினம் 1959ஆம் ஆண்டு இவருக்கு ‘சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார். 
  • மதுரை திருஞானசம்பந்த ஆதினத்திடமிருந்து 1955ஆம் ஆண்டு ‘ஆராய்ச்சிக் கலைஞர்’ என்ற பட்டம் பெற்றார்.
  • தருமபுரம் ஆதினம் 1963ஆம் ஆண்டு ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ என்று பட்டம் வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தார்.
  • மா. இராசமாணிக்கனார் பெயரில் அவர் மகன் கண் மருத்துவர் இரா.கலைக்கோவனால் “டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்”   திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
  • "தலைமைப் புலமை நிலையம் ,தமிழ் மொழிக்குத் தக்க பாதுகாப்பு வளையம் "- என இவரை புகந்துரைக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

சிந்து சமவெளி நாகரிகம் பற்றி முதன் முதலாக நூல் எழுதியவர், மட்டுமல்லாமல் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு மற்றும் சோழர் ஆராய்ச்சி நூல் ஆகிய குறிப்பிடத்தகுந்த நூல்களை எழுதிய வரலாற்றாய்வாளர்..